Wednesday, July 4, 2012

குழந்தைகள் பாராளுமன்றம்

மக்கள் தொலைக்காட்சி நேயர்களின் மகத்தான ஆதரவோடு அரசியல் களத்தில் அதிர்வுகளை ஏற்படுத்த அரங்கேறவிருக்கிறது ஓர் மாபெரும் நிகழ்வு... இது இந்தியாவின் எதிர்காலத் தூண்கள் எழுச்சியோடு தாங்கி நிற்கும் பாராளுமன்றம். குறையில்லா நாட்டினைப் படைக்க குன்றாத முயற்சியோடு குரலெழுப்பும் குழந்தைகள் பாராளுமன்றம்.

இங்கு
மாணவச் செல்வங்களே மாண்புமிகுக்களாக... மக்களவைத் தலைவராக...

ஏடும் எழுதுகோலும் ஏந்தி நின்றவர்கள் எதிர்க்கட்சித் தலைவராக...

பிழை செய்தறியாத பிள்ளை நிலாக்கள் பிரச்சினைக்குத் தீர்வளிக்கும் பிரதமராக...

நாட்டுக்கு நல்லறிவுரையை அள்ளித் தரும் இப்பாராளுமன்றத்தில் உமது பள்ளிக் குழந்தைகளும் பங்கேற்க வேண்டுமா?

மக்கள் நலனில் அக்கறை கொள்ளும் மாண்புமிகுக்களாக மலர வேண்டுமா?

உமது பள்ளியில் எட்டாம் வகுப்பு முதல் பன்னிரண்டாம் வகுப்பு வரை பயிலும் மாணவ. மாணவியர்களில் ஆர்வமும் திறமையும் உள்ளோரைத் தேர்வு செய்து அவர்களைப் பற்றிய சுயவிவரக் குறிப்புகளை புகைப்படத்துடன் எங்களுக்கு அனுப்புங்கள்...

பார் போற்றும் குழந்தைகள் பாராளுமன்றத்தில் அவர்களின் குரல் ஓங்கி ஒலிக்க நாங்கள் வாய்ப்பளிக்கிறோம்... இது தகுதியானவர்களைத் தேர்ந்தெடுக்கும் முறைகேடில்லாத தேர்தல்...

மக்களாட்சியின் மாண்பினைப் பதிவு செய்யும் மக்கள் தொலைக்காட்சியின் மாறுபட்ட முயற்சி...

Monday, October 10, 2011

“சாதிக்கலாம் வாங்க”பதினெண் பருவம் எனப்படும் இந்த பதினைந்து வயதில் ஒவ்வொரு மாணவனுக்குள்ளும் விதைக்கப்படும் விதைதான் அவனது எதிர்கால வாழ்க்கை நிர்ணயிக்கும் கருவியாக அமைகிறது. அந்த கருவியை இயக்க ஒரு தூண்டல் தேவைப்படுகிறது. ஒவ்வொரு மாணவனுக்குள்ளும் சாதிக்கவேண்டும் என்ற விதையை விதைத்து அந்த விதையை தூண்டிவிடும் வேலையைத்தான் மக்கள் தொலைக்காட்சி தன் கையில் எடுத்துக்கொண்டுள்ளது.

சாதிக்கணும் நினைப்பவர்களுக்கு மட்டுமல்லாமல், நாம்மால் சாதிக்கமுடியுமா? என நினைப்பவர்களுக்குமான நிகழ்ச்சிதான் “சாதிக்கலாம் வாங்க”. பொதுவாக தொலைக்காட்சி என்றாலே பொழுதுபோக்கு நிகழ்ச்சிகளை மட்டுமே வழங்குவது என்று அல்லாமல் கல்வியையும் தொலைக்காட்சி வழியாக கொடுக்கமுடியும் என நிருபித்திருக்கிறது இந்த நிகழ்ச்சி....

பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வு என்பது ஒரு கடினமான விஷயமே அல்ல என மாணவர்களுக்கு புரியவைத்து அனுபவம் வாய்ந்த ஆசிரியர்கள் மூலம் திங்கள் முதல் வெள்ளி வரை ஒவ்வொருநாளும் ஒவ்வொரு பாடப்பிரிவை எடுத்து அதாவது தமிழ், ஆங்கிலம், கணிதம், அறிவியல், மற்றும் சமூக அறிவியல் என அவர்களுக்கு எளிமையான முறையில் சொல்லிக்கொடுத்து, நல்ல மதிப்பெண் பெற்று தேர்ச்சி அடைய செய்வதே இந்த நிகழ்ச்சியின் நோக்கம். இந்த ஐந்து நாட்களில் எவையேனும் ஒன்றை காண தவறவிடும் மாணவர்கள், இந்த ஐந்து நாட்களில் நடத்தப்பட்ட பாடங்களின் தொகுப்பு மற்றும் மறுஆய்வு உங்களுக்காக சனிக்கிழமையன்று ஒளிபரப்படுகிறது. கூடுதலாக பிற மொழி பயிற்சி, தொழிற்கல்வி என மாணவர்களுக்கு பயனுள்ள விதமாக அமைக்கப்பட்டுள்ளது.

“சுவர் இருந்தால்தான் சித்திரம் எழுதமுடியும்” என்ற பழமொழிக்கேற்ப ஞாயிறு அன்று மாணவர்களுக்கு ஞாபக சக்தியை அதிகரிக்க, மனநிலை சீராக செயல்பட அவர்களுக்கு மனவளக்கலை என்ற பகுதியும் கொண்டுள்ளது. இதில் உடற்பயிற்சி, யோகாசனம் ஆகியவை பயிற்றுவிக்கப்படுகின்றன. இதில் மாணவர்கள் மனபலம் பெறுவது மட்டுமல்லாமல் பொதுத்தேர்வில் நல்ல மதிப்பெண் பெற்று தேர்ச்சி பெற இந்த பகுதி உறுதுணையாக இருக்கும்.

ஆகமொத்தம் வாரத்தின் ஏழு நாட்களும் மக்கள் தொலைக்காட்சியியில் “சாதிக்கலாம் வாங்க” என்ற தலைப்பில் அக்டோபர் 5ம் தேதி முதல் காலை 6:30மணிக்கு ஒளிபரப்பாகிறது. மாணவச் செல்வங்களே இது முற்றிலும் உங்களுக்கான நிகழ்ச்சி காணத்தவறாதீர்....


Monday, November 9, 2009

பத்து நிமிடக்கதைகள் குறும்படப்போட்டி


கதை இருக்கிறது. கரு இருக்கிறது. அதை உருவாக்குவதற்க்கான தொழில் நுட்ப வசதியும் இருக்கிறது. ஆனால் அதை எப்படி வெளிப்படுத்துவது என்று ஏங்கிக்கொண்டிருக்கும் இளம் இயக்குனரா நீங்கள்? இதோ உங்களுக்காக மீண்டும் ஒரு வாய்ப்பை ஏற்படுத்திஇருக்கிறது நமது மக்கள் தொலைக்காட்சி. பத்து நிமிடத்திற்குள் ஒரு படத்தை எடுக்க முடியுமா ? முடியும் என்றால் இன்றே சிந்தனைகளை முடுக்கிவிடுங்கள் . கதைக்கான கரு எதுவாகவும் இருக்கலாம் . அது உங்கள் விருப்பம் . நீங்கள் எடுத்து அனுப்பும் படங்களை பார்த்து மதிப்பிட பிரபல இயக்குனர்கள் தயாராக இருக்கிறார்கள் . அவர்கள் மட்டுமல்ல ஒளிபரப்பாகும் படங்களைப்பார்த்து அதனை தரப்படுத்த பார்வையாளர்களும் தயாராக இருக்கிறார்கள். பிறது என்ன . சிறந்த குறும்படங்களுக்கான பரிசுபெறும் பட்டியலில் உங்கள் படங்களும் இடம்பெறுவது உங்கள் கையில்தான் இருக்கிறது . சிறந்த படங்களுக்கு நிறைவான பரிசுகள் காத்திருக்கின்றன. எனவே காலத்தை கடத்தாமல் இன்றே களத்தில் இறங்குங்கள். பத்து நிமிடத்திற்குள் உங்கள் படைப்பாற்றலை வெளிப்படுத்தி பரிசை தட்டிச்செல்லுங்கள்.

உங்கள் குறும்படம் கீழே தரப்பட்டுள்ள வரையறைகளுக்கு உட்பட்டதாக இருக்கவேண்டும் .

1. கதைக்கான கரு எதுவாகவும் இருக்கலாம்.2 . குறும்படம் 10 நிமிடங்களுக்கு மிகாமல் இருக்க வேண்டும் .3 இறுதி படைப்பு டி வி காம் DVCAMவடிவில் இருத்தல் வேண்டும் .4.தொலைக்காட்சிக்கு அனுப்பும் படைப்பு திருப்பி அனுப்பப்படமாட்டாது . எனவே தாங்கள் ஒரு படியை வைத்து கொண்டு அனுப்புதல் வேண்டும் .5.தங்கள் படைப்புகளை தணிக்கை செய்யும் உரிமை தொலைக்காட்சிக்கு உண்டு .6.உங்கள் படைப்பு வந்து சேர வேண்டிய இறுதி நாள் 20-12 2009


தங்கள் படைப்புகளை அனுப்ப வேண்டிய முகவரி


பத்து நிமிடக்கதைகள் - குறும்படப்போட்டி ,


மக்கள் தொலைக்காட்சி ,


12-16 சுப்பாராவ் நிழற்சாலை முதல் தெரு ,


கல்லுரிச் சாலை ,


சென்னை -600006 .
தங்கள் முயற்சி வெற்றி பெற மக்கள் தொலைக்காட்சி வாழ்த்துகிறது .Thursday, May 14, 2009

மக்கள் தொலைக்காட்சிக்கு மிரட்டல்

இலங்கைத் தமிழர்களின் உண்மை நிலையை ஒளிபரப்பியதால் மக்கள் தொலைக்காட்சியை தகர்க்கப்போவதாக
மிரட்டல் விடுக்கப்பட்டது. மேலும் இனப்படுகொலையை விளக்கும்
படக்காட்சிகளை உடனே நிறுத்துமாறு நள்ளிரவில் காவல்துறையினர் வற்புறுத்தினர்.

இலங்கைத் தமிழர்களின் அவலநிலை குறித்த குறுந்தகடுகளை வெளியிடலாம் என சென்னை உயர்நீதிமன்றம் அனுமதி அளித்ததை தொடர்ந்து, இலங்கைத்தமிழர்களின் உண்மை நிலை
குறித்த காட்சிகள் மக்கள் தொலைக்காட்சியில் ஒளிபரப்பப்பட்டது.
சிறிது நேரத்திலேயே தொலைபேசியிலும், நேரிலும் மிரட்டல்கள் வரத்தொடங்கின. இதுதொடர்பாக காவல்துறையிடம் புகார் அளிக்கப்பட்டது.

இதையடுத்து, தொலைக்காட்சி அலுவலகத்திற்கு வந்த நுங்கம்பாக்கம் துணை ஆணையர் ஜாபர் ஜாலி , திருவல்லிக்கேணி
இணை ஆணையர் கணேச மூர்த்தி உள்ளிட்ட அதிகாரிகள் இலங்கை தமிழர்களின் அவலம் குறித்த காட்சிகளை ஒளிபரப்புவதை உடனே நிறுத்துமாறு வலியுறுத்தினர். உயர்நீதிமன்ற தீர்ப்பின்படியே இலங்கைத்தமிழர் அவலநிலையை ஒளிபரப்பி வருவதாக மக்கள் தொலைக்காட்சி செய்திப்பிரிவினர் காவல்துறையினரிடம் தெரிவித்தனர். ஆனால் அதனை ஏற்க மறுத்த காவல்துறை அதிகாரிகள் இலங்கைத் தமிழர் அவலநிலை குறித்த ஒளிபரப்பை உடனே நிறுத்தாவிட்டால் அலுவலகத்திற்குள் நுழைந்து வலுக்கட்டாயமாக நிறுத்த வேண்டியிருக்கும் என எச்சரித்தனர்.
இலங்கைத் தமிழர்களின் அவலக் காட்சிகள் ஒளிபரப்பாக தொடங்கியவுடன் சென்னை நகரிலும் தமிழகத்தில் பல்வேறு இடங்களிலும் மின்சாரம் துண்டிக்கப்பட்டு இருளில் மூழ்கியது. மின்தொடர்வண்டி இயக்கம் அரை மணி நேரத்திற்கும் மேலாக தடைபட்டது. பலமணி நேரம் சென்னை நகரமே இருளில் மூழ்கியது. பின்னர் மின்சாரம் வந்தபோதும் மக்கள் தொலைக்காட்சி வரவில்லையே என ஏராளமான அழைப்புகள் அலுவலகத்திற்கு வந்தன.

Wednesday, March 4, 2009

மகளிர் நாள் சிறப்பு நிகழ்ச்சிகள்


மகளிர் நாள் சிறப்பு நிகழ்ச்சிகள்


மார்ச் 8 - மகளிர் நாள் அன்று மக்கள் தொலைக்காட்சி பெண்களை மையமாக வைத்து பல்வேறு நிகழ்ச்சிகள் வழங்குகிறது.


காலை பெண்கள் நாகசுரம் வாசிக்க இசையோடு தொடங்குகிறது மக்கள் தொலைக்காட்சியின் மகளிர் நாள் நிகழ்ச்சிகள். பெண்களுக்கு தமிழில் வந்து கொண்டிருக்கும் அவள் விகடன், சினேகிதி, பெண்ணே நீ, மங்கையர் மலர் முதலான பெண்கள் பத்திரிக்கைகளை ஆய்வு பார்வையோடு நோக்கும் பெண்கள் இதழ்கள் ஒரு பார்வை, பெண்களின் பெருமைகளை பேசும் பெண்கள் கவியரங்கம் 'பெண்மை போற்றுதும்', மகளிர் நாள் சிறப்பையும் மகளிர் உரிமைகளையும் பகிர்ந்து கொள்ளும் நேரலை நிகழ்ச்சி, தங்கள் சொந்த முயர்சியால் மிகப்பெரிய வெற்றிகளை பெற்ற பெண்களின் வாழ்கையை பதிவு செய்யும் பெண்ணால் முடியும் , குழந்தை பெறாத பெண்களை இந்த சமூகம் என்ன பாடுபடுதுகின்றது என்பதை சித்தரிக்கும் ஈரானிய திரைப்படம் லைலா,

பெண்கள் கல்லூரி மாணவர்கள் பங்கேற்கும் கல்லூரி கொண்டாட்டம்.


துணை நடிகைகளின் வலி நிறைந்த வாழ்க்கையை பதிவு செய்யும் கறுப்பு வெள்ளை என்று பல நிகழ்ச்சிகள் மக்கள் தொலைகாட்சியில் ஒளிபரப்பாகின்றன.


ஒவ்வொரு நிகழ்ச்சியும் பெண்களின் வாழ்க்கையை பிரதிபளிப்பதோடு, அவர்களுக்கு தன்னம்பிக்கையை ஊட்டுவதாகவும் இருக்கலாம் .